அந்த  நம்பிக்கைதான்  காந்தி

பத்தொன்பது நூற்றாண்டுகளாக பழகிவந்த சித்தாந்தங்களைப் புறந்தள்ளி, சிக்கல்களைத் தீர்க்க அறவழிப் போராட்டத்தை அரசியல் களத்தில் முன் வைத்துப்

பத்தொன்பது நூற்றாண்டுகளாக பழகிவந்த சித்தாந்தங்களைப் புறந்தள்ளி, சிக்கல்களைத் தீர்க்க அறவழிப் போராட்டத்தை அரசியல் களத்தில் முன் வைத்துப் புதுப் பாதையை நமக்குக் காட்டிச் சென்றவர் காந்தியடிகள். காந்தி வேறு காந்தியம் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாது ஒன்றி வாழ்ந்தவர்.

பொதுவாக தனி மனித வாழ்க்கை வேறு அவர்தம் கொள்கை வேறு என்றுதான் பார்க்க முடியும். ஆனால் காந்தியடிகள் மட்டும்தான், அவ்வாறு பார்க்காது என் வாழ்க்கையே என்னுடைய செய்தி என்றார்.

அரசியல் அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்டு, அதற்காகவே நிறுவனங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் இந்தக் காலகட்டத்தில் அவருடைய அரசியல் சிந்தனையான அதிகாரப் பரவலாக்கல் எந்த அளவு அவசியமானது, சாத்தியமானது என்பதை அலசிப் பார்க்க வேண்டும்.

அதிகாரங்களை மையப்படுத்தும் போது ஏற்படும் நிர்வாகச் சீர்கேடு, ஊழல், வெளிப்படைத்தன்மையற்ற நிர்வாகம், தேவையற்ற நிதிச் செலவு என்று நாம் அனுபவித்து வரும் இன்னல்களுக்கு மாற்றாக நேர்மையான நிர்வாகத்தை, வெளிப்படையான நிர்வாகத்தை அதிகாரப் பகிர்வு கொடுக்காதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். 

ஆனால் இப்போது இருக்கும் நிலையை வைத்து இக்கருத்தின் ஆழத்தை எடை போட்டு விடக்கூடாது. உதாரணத்திற்கு, தற்போது அரசியல் பரவல் முறை என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பஞ்சாயத்து அமைப்பு முறை. நாடாளுமன்றமும், சட்டமன்றமும், அதனுடைய அங்கத்தினர்களும் தலைவர்களும் என்ன செய்கிறார்களோ அதனைத்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பிரதிநிதிகளும் செய்கிறார்கள். அங்கு பார்க்கக் கூடிய அந்த நிர்வாகச் சீர்கேடுகளும், ஊழலும், வெளிப்படைத் தன்மையற்ற நிலையையும் பார்க்கும்போது நாம் அதிகாரத்தைப் பரவலாக்காது, ஊழலையும், நிர்வாகச் சீர்கேட்டையும் பரவலாக்கிவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்தப் பரவலாக்கப்பட்ட அமைப்புகளின் தலைவர்களுக்கு தம் கண் முன் இருக்கும் ரோல் மாடல், மத்திய, மாநில அரசுகள்தான். ஆக நாம் காந்தியடிகளின் அரசியல் பரவலாக்கம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றால் அது மத்திய, மாநில அரசுகளில் இருந்து தொடங்கி கிராமங்கள் வரை நீட்டிக்கப்பட வேண்டும். 

கிராமங்களில் இருக்கும் குளம் குட்டை முதல் நிலங்கள் வரை மாநில அரசாங்கத்திற்கும், கனிம வளங்கள் மைய அரசாங்கத்துக்கும் சொந்தமாக வைத்துக் கொண்டு நிர்வாகத்தை கிராம மக்கள் நடத்துவார்கள் என்றால் அது வெறும் கண்துடைப்புதான்.

கர்நாடக மாநிலத்திலும், ஆந்திர மாநிலத்திலும், ஏன் தமிழகத்திலும் கிராமங்களில் இருந்த கனிம வளங்கள் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு எவ்வாறு சூறையாடப்பட்டது என்பதை நாம் அறிவோம்.

இந்த நிலையில் கிராம ஆட்சிக்கு என்று என்ன அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. அவை திறமையான நிர்வாகத்திற்குப் போதுமானதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இதையெல்லாம் மீறி சில கிராமப் பஞ்சாயத்துக்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றால் அங்கிருக்கும் தலைவர்களின் தனிப்பட்ட பங்களிப்புதான் அதற்குக் காரணம். 

நகரங்கள் கான்கீரிட் காடுகளாக உருவாகிக் கொண்டு விழி பிதுங்கிக் கொண்டிருக்கும்போது, நகரத்தில் இருக்கும் வசதி வாய்ப்புகள்தான் மக்களை நகரங்களை நோக்கிப் படையெடுக்க வைக்கிறது. இந்த வசதி வாய்ப்புகளையெல்லாம் கிராமத்திலேயே செய்து விட்டால் கிராம மக்கள் நகரத்தை நோக்கிச் செல்வது குறையும் என்று சில முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நகர விரிவாக்கத்தால் கிராமங்கள் அழிக்கப்படுகின்றன என்ற உண்மையை ஏனோ யாரும் கருத்தில் கொள்ள மறுக்கிறார்கள்.

இப்போது சாலையில் சென்றோம் என்றால் நாம் எங்கேயிருக்கிறோம் என்பதை இடத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியாது, நம்முடைய செல்போன் டவர் என்ன சொல்கின்றது என்பதையோ, நம்முடைய மொபைல் போனில் உள்ள மேப்பைப் பார்த்தோதான் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அடையாளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. கிராமங்கள் குடியிருப்புகள் அல்ல, அவை நமது கலாச்சாரத்தின், நாகரிகத்தின் அடிப்படைகள்.

அடுத்து நாம் மிக முக்கியமாகப் பார்க்க வேண்டியது இந்தியாவின் பன்முகத் தன்மை.  உலகில் எந்த நாட்டிற்கும் இல்லாத பெருமை நம் நாட்டிற்கு மட்டுமே உண்டு. மதங்கள் நம்மை சீர்படுத்த வந்தவை என்பதை ஏற்றுக் கொண்ட நாகரிக மக்கள் அதிகம் வாழும் பாரத தேசத்தில் மதங்களுக்கிடையே வெறுப்புகளும், மோதல்களும் ஏற்படுவதற்கு நாம் வெட்கித் தலைகுனிய வேண்டியதுதான். மதத்தையும், ஜாதியையும் பயன்படுத்தாத அரசியல் கட்சிகள் இன்று எதுவுமே இல்லை. சில அரசியல் கட்சிகள் வெளிப்படையாக இவற்றைக் கூறுகின்றன. சிலர் மறைமுகமாக இவற்றை ஆதரிக்கிறார்கள். அவ்வளவுதான்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அன்றைய பிரித்தாளும் ஆங்கில அரசு கொண்டுவந்த சில சட்டங்கள் அவர்களை பெரும்பான்மை இந்து அமைப்புக்கு வெளியே கொண்டு சென்று தனிமைப்படுத்திவிடும் என்றும், பிறகு இது தீராத சமூகப் பகையாக மாறிவிடும் என்றும் அவர் தனது புரிதலின் அடிப்படையில் பயந்தார். அந்த தனிமைப்படுத்தல் தீண்டாமைக்குட்பட்ட மக்களை வன்முறை நிறைந்த தொடர்தாக்குதலுக்கு உள்ளாக்கும் என்றும் அவர் அச்சம் கொண்டார்.

இந்த அச்சம் ஓரளவு நியாயமானது. இந்து மதவெறி, அரசியல் மற்றும் சமூகக் கோட்பாடாக மாறும்போது, ஜனநாயகம் என்பதே கேள்விக்குள்ளாகும்போது மனித உரிமைகள் வெறும் பேச்சாக மாறும்போது, ஒடுக்கப்பட்ட, பலமற்ற, ஒருங்கிணைக்கப்படாத சமூகங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

காந்தியடிகள் பயந்து அவ்வாறு பார்க்கவில்லை, பரிவோடு பார்த்தார். வன்முறையான எந்தச் செயலையும் காந்தியடிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. காந்தியடிகளின் வாழ்க்கையைப் பார்க்கும்போது இந்த வன்முறைச் சிந்தனையை எவ்வாறெல்லாம் கடந்து வந்தார் என்பது தெரியும்.

நம்முடைய வாழ்க்கையையும் இவ்வாறு தான் பார்க்க வேண்டும்.  வெவ்வேறு காலகட்டங்களில் காந்தியடிகள் கோபத்தை எவ்வாறு கையாண்டு வந்திருக்கிறார் என்பதை பார்த்தால் தான் அகிம்சையை நோக்கிய அவருடைய வளர்ச்சி நமக்குப் புரியும்.

தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளின் செயலாளராக இருந்த பெண்மணி செல்சின், காந்தியடிகளின் முன்னால் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த காந்தியடிகளுக்கு ஒரே கோபம். ஓங்கி கன்னத்தில் அறைந்து விடுகிறார். கஸ்தூர்பா காந்தி தீண்டத்தகாதவரின் சிறுநீர்ப் பானையை சுத்தம் செய்யவில்லையே என்று ஒரே கோபம், ஆனால் அவரை அடிக்கவில்லை, கோபத்தோடு கையைப் பிடித்து இழுத்து வெளியே தள்ள முயற்சிக்கிறார். கோபத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

போனிக்ஸ் குடியிருப்பில் பழங்களைத் திருடிச் சாப்பிட்டுவிட்டு, கேட்டபோது உண்மையை மறைத்துப் பொய் சொல்லிவிட்டார் தன்னுடைய கடைசி மகன் தேவதாஸ் காந்தி என்ற கோபம் காந்திக்கு, ஆனால் தேவதாஸை அடிக்கவில்லை. போனிக்ஸ் குடியிருப்பில் இருந்து தரத் தரவென்று இழுத்து வரவில்லை. மாறாக தன்னைத் தானே கன்னத்தில் அடித்துக் கொள்கிறார். இங்கே அவருடைய கோபத்தை வேறுவிதமாக வெளிப்படுத்தினார்.

தென்னாப்பிரிக்க சிறைக்கூடத்தில் ஒருமுறை காந்தியடிகள், கழிப்பறையில் இருக்கிறார். கழிப்பறைக்கு கதவு கிடையாது. ஆப்பிரிக்கக் கைதி ஒருவர் வந்து, அந்தக் கழிப்பறையை தான் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக காந்தியடிகளைப் பிடித்து இழுத்து வெளியில் தள்ளிவிடுகிறார். காந்தி கோபத்தை அடக்கிக் கொண்டார்.

காந்தியடிகளின் போராட்டத்தில் நம்பிக்கை வராத இந்தியர் மீர் ஆலம் என்பவர், காந்தியடிகளைத் தடிகொண்டு தாக்குகிறார். உணர்வற்று காந்தி விழுந்துவிடுகிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று காந்தியடிகள் கூறிவிடுகிறார். காந்திக்கு கோபம் வரவில்லை. நம்மைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே என்ற எண்ணம்தான் மேலோங்கி நின்றது.

இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒருவர் மீது ஒருவர் கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கலவரப் பகுதிகளுக்குச் செல்கின்றார் காந்தியடிகள். அங்கு துயரப்படும் மக்களோடு மக்களாக அவரும் வாழ்ந்து அங்கே அமைதியை நிலைநாட்டினார்.

இந்தப் பரிணாம வளர்ச்சிதான் காந்தியக் கொள்கை, சித்தாந்தம். ஆனால் காந்தியடிகளின் சிறப்பு, தான் உருவான வரலாற்றை அவரும், அவரோடு பயணித்தவர்களும் ஆவணப்படுத்த அனுமதித்ததுதான். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் அஞ்சத்துணியும் இந்தப் பதிவுகள்தான் இன்றும் காந்தியடிகளைப் பற்றிய உலகளாவிய ஆர்வத்திற்கு அடிப்படை.

மதக்கலவரமானாலும், ஜாதி மோதல்களானாலும் அல்லது சமூக நீதி, பொருளாதார சமத்துவம் என்ற நிலைப்பாடு கொண்டு வன்முறைப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்ட போராளிகளின் தாக்குதல் ஆனாலும், வன்முறை தன்னுடைய கோரத்தாண்டவத்தை ஆடிக் கொண்டிருக்கிறது.

வன்முறை மேலும் வன்முறையைத் தூண்டுமே தவிர நிரந்தரத் தீர்வைக் கொண்டுவராது. தற்போதைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, ஆயுதங்களின் வளர்ச்சி ஆகியவை நம்மை வேறுதிசையில்தான் சிந்திக்க வைக்கும். நாடுகளுக்கிடையே போர் என்றால் இந்தப் பூமிப்பந்து சிதைந்து சுக்கு நூறாகிவிடும் என்பதை எல்லா நாடுகளும் உணர்ந்ததால்தான் இரண்டாவது உலகப் போருக்குப் பின் பெரிய எந்தப் போரும் நடக்கவில்லை.

உலகப்போர் நடந்த அந்த கால கட்டத்தில் கூட பிரச்னைக்கு அகிம்சை வழியில் தீர்வுகாண முடியும் என்ற புதிய அணுகுமுறையைப் பெரிய அளவில் நடத்திக் காட்டி வெற்றிகண்ட பெருமை காந்தியடிகளுக்கு உண்டு.

இவ்வாறு தான் ஏற்றுக் கொண்ட கொள்கைகளை மற்றவர்களின் பார்வைக்கு வைத்து, அதைப்பற்றிய விவாதத்தை ஏற்படுத்தி, பரவலாக மக்களால் ஏற்றுக் கொள்ள வைக்க காந்தியடிகளால் முடிந்தது.

உண்மையான கருத்துகளை, உண்மை உணர்வோடு வாழ்ந்து, அதனை எடுத்துச் சொன்னால், மக்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை காந்தியடிகளுக்கு இருந்தது. அந்த நம்பிக்கைதான் காந்தி.

கட்டுரையாளர்:  இயக்குநர், தேசிய காந்தி அருங்காட்சியகம், புதுதில்லி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com